மாஞ்சா நூல் அறுத்து குழந்தை பலி- 2 பேர் கைது

சென்னை, நவம்பர்-04

சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டம் விட பயன்படுத்தப்படும் கண்ணாடி கூழ் கலவையால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் அறுபட்டு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இதுவரை பலர் பலியாகி உள்ளனர். 

இது தொடர்பான வழக்கில் நாடு முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து கடந்த 2016ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. எனினும், தடையை மீறி பட்டம் விடும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. 

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் கோபால் என்பவர் தனது மூன்று வயது குழந்தை அபினேஷ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பட்டம் விட்டுக்கொண்டிருந்தவர்களின் மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தை அறுத்ததில் அபினேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விதிகளை மீறி பட்டம் விட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (20) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *