அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய என் உயிரை கொடுக்கவும் தயார்.. முதல்வர் உருக்கம்

திமுகவை வீழ்த்த தன் உயிரே போனாலும் பரவாயில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சிவகங்கை, மார்ச்-26

அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்து வரும் பிரசாரத்தால் எனக்கு தொண்டை கட்டிவிட்டது. அதனால் சரியாக பேச முடியவில்லை. இருப்பினும் முடிந்த அளவு பேசுகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தார்.

அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாது.

உலகிலேயே பொய் பேசுபவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் மு.க.ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும்.

அவர் எங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூற நான் தயாராக இருக்கிறேன். அவர் தயார்தானா? இதே திருப்பத்தூரில் மேடை அமைத்து விவாதிக்க தயாராக உள்ளேன். இரு தரப்பையும் கேட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும். மக்கள் தான் நீதிபதிகள். மக்கள் தீர்ப்பே… (மகேசன் தீர்ப்பு என பொதுமக்கள் கூறினர்.)

மக்கள் இறுதி தீர்ப்பு கூறட்டும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள். மு.க.ஸ்டாலினின் முதல்- அமைச்சர் பகல் கனவு ஒருநாளும் பலிக்காது.

நான் விவசாயம் செய்வதால் விவசாயி என கூறி வருகிறேன். ஆனால் இது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை பற்றி கொச்சைப்படுத்தி பேசுகிறார். அவதூறாக பேசுகிறார். நான் விவசாயி என்பதில் உனக்கு என்ன கஷ்டம்? ஏன் கோபம் வருகிறது?

அ.தி.மு.க. அமைத்திருப்பது வெற்றி கூட்டணி. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் வந்து விடும். யாரும் வியாபாரம் செய்ய முடியாது. ஓட்டையும் போட்டு அடியும் வாங்கணுமா? இது தேவையா நமக்கு?

ஆட்சி அதிகாரம் இல்லாத போதே தி.மு.க.வினர் அட்டூழியம் செய்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா?

புரட்சித்தலைவி அம்மா வழியில் அவரது அரசு சட்டம்-ஒழுங்கை பேணி காத்து வருகிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை சீராக வைத்திருப்பதில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

இந்த நிலை தொடர வருகிற சட்டமன்ற தேர்தல் மூலம் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக உங்களது வாக்குகளை அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நீர் மேலாண்மை தற்போது சிறப்பாக உள்ளது. விவசாயிக்கு தேவை தண்ணீர். வருண பகவான் நல்ல மழை பொழிய அதனை அனைத்து ஏரி, குளங்களில் தேக்கி வைக்கும் வகையில் தூர்வாரி உள்ளோம். இதனால் கோடை காலத்தில் கூட ஏரிகள் நிறைந்துள்ளது. மழை நீரை வீணாகாமல் சேமித்துள்ளோம்.

முதல்-அமைச்சர் ஒரு விவசாயி என்பதால் தண்ணீரின் அருமை எனக்கு தெரிகிறது. ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது.

இந்திய அளவில் நீர் மேலாண்மைக்கு தமிழகம் தற்போது விருது பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் எந்த விருதும் பெற்றது கிடையாது.

கல்வியிலும் அ.தி.மு.க. அரசு சாதனை படைத்து வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எல்லா துறைகளிலும் அ.தி.மு.க. அரசு சாதனைகளை படைத்துள்ளது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஊழல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆட்சியில் இருந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் வாய்தா வாங்கி வருகின்றனர்.

ஊழல் செய்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டுமா? ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. ஊழல் என்றால் தி.மு.க., தி.மு.க. என்றால் ஊழல்.

எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. தற்போது தி.மு.க.வில் வாரிசு அரசியலாக உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு தி.மு.க. பெருந்தலைவர்கள் தலையாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைகள் மாற வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சிவகங்கை தொகுதியில் சண்முகராஜா கலையரங்கம் முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளது. தி.மு.க. எந்த திட்டமும் தந்ததில்லை. நான் விவசாயி என்று கூறினால் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது.

நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். நானும், மண்வெட்டு எடுத்து வருகிறேன். அவரும் மண்வெட்டு எடுத்து வரட்டும். இருவரும் வேலை செய்வோம். மக்கள் முடிவு செய்வார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்படும் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்ததா? அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதா? என்பதை பொது மேடையில் விவாதிக்க நான் தயார். ஸ்டாலின் தயாரா?.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி கொண்டு வரப்படும். புறவழிச்சாலை அமைக்கப்படும். எண்ணற்ற திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும். எனக்கு தொண்டை வலி உள்ளது. அதை பற்றி எனக்கு கவலை இல்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையவும், மக்களுக்காகவும் எனது உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளேன்.

உயிரை கொடுத்தாவது அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்வேன். அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *