நாடாளுமன்ற கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி, மார்ச்-26

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் விவாதம் நடைபெற்றது. ஏப்ரல் 8ம் தேதி வரை 2 அமர்வுகளாக கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டாவது அமர்வு தொடங்கிய பின்னர், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், 5 மாநில தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும், முன்கூட்டியே கூட்டத்தொடரை முடிக்கும்படி பல்வேறு எம்பிக்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் சுமார் 2 மாத காலமாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 வாரங்களுக்கு முன்னதாகவே இன்றுடன் நிறைவடைந்தது. நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இரு அவைகளின் தலைவர்களும் அறிவித்தனர். இந்த கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தில்லி ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *