டிடிவி தினகரனால் அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது….அதிமுக எம்.எல்.ஏ அதிரடி

புதுக்கோட்டை, மார்ச்-26

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது தினகரன் அணியில் இருந்தவர் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி. 2019-இல் ரத்தின சபாபதியின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்ய அதிமுக அரசு முயற்சி மேற்கொண்டது. உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதால், அவருடைய எம்.எல்.ஏ. பதவி தப்பியது. பின்னர் 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பிறகு, அதிமுகவுடன் ரத்தின சபாபதி இணைந்து பயணிக்கத் தொடங்கினார்.

இந்த சூழலில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ரத்தினசபாபதிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்ததோடு, அறந்தாங்கி தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் மு.ராஜநாயகத்துக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.

இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் விதமாக ரத்தினசபாபதிக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இவருடன் சேர்த்து மாவட்டத்தில் அதிருப்தி வெளிப்படுத்திய பலருக்கும் பதவிகள் அளிக்கப்பட்டன.

இந்த சூழலில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை அவர் சந்தித்து, பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தையும் காட்டினார். பின்னர், அவர் கூறியது:

அதிமுகவில் பதவியில் இருப்பதைவிட தொண்டராகவே இருக்கே விரும்புகிறேன். ஆகையால்தான் தற்போது வழங்கிய தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவு எடுத்துள்ளேன்.

மக்கள் நலக்கூட்டணியில் இருந்தவர்களெல்லாம் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையிலான வாக்குகளை அமமுக பிரிக்கப் போகிறது. ஆகையால், அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது.

நான் ஏற்கெனவே கூறியபடி அதிமுக, அமமுக இணைந்திருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டு இருக்காது. அதிகாரத்தின் உச்சத்தில் இருந்ததால் நான் கூறியதை அவர்கள் செவிமடுக்கவில்லை.

இணைய வேண்டும் என்ற கருத்தில் நான் மட்டுமல்ல பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷாவும் உடன்பட்டதாக அறிந்தேன்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் கட்டிக் காக்கப்பட்ட இயக்கம் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து விடுமோ என்ற வருத்தமும், இதைத் தடுக்க நான் முன்கூட்டியே கூறியதை ஏற்க மறுத்துவிட்டார்களே என்ற ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இணைய வேண்டும் என்று கூறிய ஒரே காரணத்துக்காக அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதிமுக, அமமுகவை இணைக்க மீண்டும் முயற்சி செய்வேன். அதே வேளையில், இந்த கட்சியில் உள்ள விஷச்செடிகளை அகற்றுவதற்கும் கடுமையாக உழைப்பேன்.தோல்வி பயத்தால் தற்போது அமமுகவை அதிமுகவோடு இணைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். தேர்தலுக்கு குறுகிய நாட்கள்தான் இருக்கின்றன.எனவே, இவர்கள் போடும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வரமுடியாது.

அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு அமமுக இணைவது கட்டாயம். தேர்தலில் மக்களை விலைகொடு்த்து வாங்கிடலாம் என எண்ணுவது மடத்தனம்.கொடுக்கும் பணத்தை வாக்காளர்கள் வாங்கிக்கொள்வார்கள். ஆனால், அது அப்படியே பணம் கொடுப்பவருக்கு வாக்குகளாக மாறும் என கருதுவது தவறு என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *