அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்தின் மீது அமைச்சர் வேலுமணி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, எனக்கு எதிரான வழக்கை எதிர்மறை பிரச்சாரத்திற்கு அறப்போர் இயக்கம் பயன்படுத்துகிறது என அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை, மார்ச்-26

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை கடந்த முறை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, சட்டமப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என்றும், நிலுவையில் உள்ள இந்த வழக்கை எதிர்மறை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் கூறி, வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளனர்.

இந்நிலையில், உத்தரவை மீறி இந்த வழக்கு குறித்து பத்திரிகை, ஊடகம், சமூக வலைதளம் ஆகியவற்றில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்தின் மீது அமைச்சர் வேலுமணி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனையேற்ற நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று (மார்ச் 26) விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *