திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தி.மு.க. முக்கிய தலைவர்களில் ஒருவரும் வேட்பாளருமான எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை, மார்ச்-26

முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளருமான எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம்- பரிசுப் பொருட்களை அவருக்கு சொந்தமான இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் வந்தது. இது பற்றி தேர்தல் ஆணையம், வருமானவரித்துறைக்கு தகவல் அனுப்பியது.
அவர்கள் உடனடியாக எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனையை தொடங்கினார்கள். இதற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் 20 வாகனங்களில் பிரிந்து பல்வேறு இடங்களுக்கு சென்றார்கள்.

எ.வ.வேலுவுக்கு திருவண்ணாமலையில் 2 என்ஜினீயரிங் கல்லூரிகள், 2 கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக், ஒரு சர்வதேச பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. கல்வி அறக்கட்டளையும் செயல்படுகிறது. அந்த கல்லூரிகளுக்கு சென்று முதலில் சோதனையை தொடங்கினார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, மினரல் நிறுவன அலுவலகம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு, பல்வேறு அலுவலகங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

அவர்கள் பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்த பல்வேறு அறைகளிலும் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த அலமாரிகள், பெட்டிகள் மற்றும் சந்தேகப்படும் இடங்கள் பலவற்றிலும் அதிகாரிகள் சோதனை செய்தார்கள். இதில் பணம் மற்றும் பொருட்கள் கிடைத்ததா? என்பது பற்றி எந்த தகவலையும் இதுவரை வருமானவரித்துறை வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *