பா.ஜ.க. ஆட்சியில் வாழ்வதை விட கொரோனாவுடன் வாழ்வது எளிது.. சீமான்

ராசிபுரம், மார்ச்-26

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ராசிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு இந்தி மொழியை திணிக்கிறது. இன்று கல்வி, மருத்துவம், குடிநீர் என அனைத்துமே தனியார் மயமாகி விட்டது. நாம் நமது நாட்டை நமது நாடு என்று கூற முடியாத நிலையில் உள்ளோம்.அதானியும், அம்பானியும் நமது நாடு என்று சொல்லிக் கொள்ளலாம். எல்லாமே தனியார் மயமாக்கிவிட்டால் அரசின் வேலைதான் என்ன?

மக்களின் நலன் பற்றி சிந்திக்காத தலைவர்களே தற்போது உள்ளனர். இவர்கள் தனியார் முதலாளிகளின் தரகர்களாக இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு உதவி செய்திருப்பதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இவ்வளவு பேர் ஏழைகளாகவே இருப்பதற்கு நீங்கள்தானே காரணம். பா.ஜனதா ஆட்சியில் வாழ்வதை விட கொரோனாவுடன் வாழ்வது எளிதாகும். அந்த அளவுக்கு பா.ஜனதா கொரோனாவை விட கொடியதாகும்.

நாட்டில் 25 கோடி மக்கள் இரவு உணவு இன்றி தூங்க செல்கிறார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டுடன் குழந்தைகள் இருப்பதாக மத்திய அரசே விளம்பரம் செய்கிறது. குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே செல்கிறது.

எல்லா வளமும் இருந்தும், நாட்டில் பலர் இன்னமும் முன்னேறாமலேயே இருக்கிறார்கள். இதற்கு ஆட்சியாளர்களே காரணம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *