டெல்லியில் தீவிர வாகன கட்டுப்பாடு அமல்…

புதுடெல்லி, நவம்பர்-04

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தீவிர வாகன கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (நவ.04) காலை 8 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தலைநகர் டில்லியில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசின் அளவு அதிகரித்து, அபாய கட்டயத்தை எட்டி உள்ளது. இதனால் காற்று மாசுபாட்டை குறைக்க 3வது முறையாக ஒற்றை-இரட்டை இலக்க வாகன கட்டுப்பாட்டை டில்லி அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த வாகன கட்டுப்பாடு நவ.15 வரை தொடரும் எனவும், கட்டுப்பாடுகளை அனைவரும் தவறாமல் பின்பற்றும் படியும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

மின்சார வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள், மத்திய அமைச்சர்களின் வாகனங்கள், நீதிபதிகளின் வாகனங்கள், சபாநாயகர், எம்.பி. க்கள், முதல்வர்கள் ஆகியோரின் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் டெல்லி முதல்வரின் வாகனத்திற்கு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் வாகன கட்டுப்பாடுகளை மீறாமல் இருப்பதை கண்காணிக்க டில்லி முழுவதும் 350 போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *