தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு 43.12% பேர் ஆதரவு.. டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்.!

தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி- சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை, மார்ச்-25

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்பது குறித்து முந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார் என்பது குறித்து கடந்த 3 மாதங்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி- சி வோட்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி, திமுக கூட்டணிக்கு 177 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 49 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு 38 தொகுதிகள் கிடைக்கும் என்றும் அதிமுகவுக்கு 12 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் இதர கட்சிகளுக்கு 2 தொகுதிகள் கிடைக்கலாம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டலம், தெற்கு மண்டலத்திலும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளில் திமுக 31 இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 9 தொகுதிகளும், அமமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் திமுக 11 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அதிமுக 4 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வாரத்துக்கு முன் வெளியிடப்பட்ட தேர்தல் முந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 158 இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. 2 வார இடைவெளியில் திமுகவுக்கு கூடுதலாக 29 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக 43.12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக 29.7 சதவீதம் பேரும், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக 1.7 சதவீதம் பேரும், கமல்ஹாசன் முதல்வராக 4.8 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள் மீது 50.38 சதவீத தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *