சேலத்தில் வரும் 28ம் தேதி ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்.!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். சேலத்தில் நடைபெற உள்ள இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

சென்னை, மார்ச்-25

இது தொடர்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார மாபெரும் பொதுக்கூட்டம் சேலத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் வருகிற 28ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் நடக்கிறது.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொது செயலாளர் கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல்ராஜன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் தமிழக தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *