அதிமுக வேட்பாளர் காரில் ரூ.1 கோடி பறிமுதல்

திருச்சி பேட்டவாய்த்தலையில் முசிறி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராசு காரில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி, மார்ச்-25

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பேட்டவாய்த்தலை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரை அதிகாரிகள் மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட கட்டுக்கட்டான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீரங்கம் தோ்தல் நடத்தும் அலுவலா் நிஷாந்த் கிருஷ்ணா, ஜீயபுரம் ஏடிஎஸ்பி செந்தில்குமாா் கொண்ட குழுவினா் ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்துக்கு அவா்களை அழைத்து வந்து பணத்தைக் கணக்கிட்டனா். இதில் சுமார் 1 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக காரில் வந்த முசிறியை சேர்ந்த ஜெயசீலன், சிவக்குமார் உள்பட 4 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், கார் ஆகியவை முசிறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராசுவு-க்கு சொந்தமானது என்றும், அவரது அறிவுறுத்தலின்பேரில் பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் நிஷாந்த் கிருஷ்ணா கூறுகையில், ‘‘தேர்தல் அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும்படையினரால் பெட்டைவாய்த்தலை மெயின் ரோட்டில் ரூ.1 கோடி சிக்கியுள்ளது. இந்த பணம் எம்எல்ஏ மகனின் காரிலிருந்து கிடைத்துள்ளது. ரூ.50லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இதுபற்றி வருமான வரித்துறை விசாரிக்க பரிந்துரை செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *