பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்.. முதல்வர் வாக்குறுதி

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.

பழனி, மார்ச்-25

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழனியில் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் நம்முடைய கட்சியை விமர்சிப்பதை தொடர் வாடிக்கையாக கொண்டுள்ளார். திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். ஸ்டாலின் எவ்வளவு அவதூறு பிரச்சாரம் செய்தாலும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. அதிமுகவிற்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து ஸ்டாலின் விரக்தியின் விழிம்பிற்கே சென்றுவிட்டார் என விமர்சித்தார்.

திருப்பதியைப் போல பழனியும் பிரம்மாண்ட நகரமாக உருவாக்கப்படும். அதற்காக ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழனி மலையை சுற்றிலும் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கே புனித ஸ்தலமாக விளங்குவது பழனி, அதனால் தான் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, ரசீது வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி கடன்களும், கூட்டுறவு சங்கங்களில் 6 சவரன் வரையிலான நகைகடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இல்லத்தரசிகளின் சுமைகளை குறைப்பதற்காக விலையில்லா வாஷிங் மெஷின் வழங்கப்படும் உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை எடுத்துரைத்தார். பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *