திமுக ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற சட்டசபையில் முதல் தீர்மானம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதல்சட்டப் பேரவையில் வேளாண் சட்டங்களைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சேலம், மார்ச்-25

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை வீரபாண்டியார் திடலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அங்கு ஆத்தூர் திமுக வேட்பாளர் சின்னதுரை, கெங்கவல்லி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, சங்கராபுரம் திமுக வேட்பாளர் உதயசூரியன், ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மணிகண்டன், கள்ளக்குறிச்சி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, ”மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களைக் கண்டித்து மம்தா பானர்ஜி மற்றும் கேரள சட்டப்பேரவையைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வந்ததுபோல் திமுக ஆட்சி அமைத்து முதல் சட்டப்பேரவையில் வேளாண்சட்டங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீங்கள் இங்கே, கொடுமையான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று காத்திருப்பது பெருத்த உற்சாகத்தை தருகிறது. உங்களை தேடி, நாடி வந்து ஓட்டு கேட்கிறேன். ஏதோ ஓட்டு கேட்பதற்காக மட்டும் நான்வரவில்லை. என்றும் உங்களோடு இருந்து, உங்கள் பிரச்னைகளுக்காக வாதாடி, வாழ்வின் சுக, துக்கங்களில் பங்கு கொள்பவன் என்ற உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். வற்றாத வசிஷ்டநதி பாயும் ஆத்தூர், கலகக்குறிச்சி என்று போற்றப்படும் கள்ளக்குறிச்சி, அர்த்தனாரீஸ்வரர் அருள்பாலிக்கும் ரிஷிவந்தியம், மலைவாழ் மக்கள் நிறைந்த சங்கராபுரம் என்று சிறப்புகள் கொண்ட தொகுதிகளுக்கு உங்களில் ஒருவனாக நின்று வாக்கு சேகரிப்பது பெருமை.
இன்று தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி இருக்கிறார்.

அவர் ஏதேதோ பேசுகிறார் என்பதைவிட, வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுகிறார் என்றே கூற வேண்டும். அவர் முதல்வரான கதையை நான் சொன்னேன். ஊர்ந்து போகிறார், தவழ்ந்து போகிறார் என்று நான் இட்டுக்கட்டி பேசவில்லை. தொலைகாட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் நான் மட்டுமல்ல, மக்கள் அனைவரும் பார்த்த காட்சியை தான், நான் அவ்வாறு கூறினேன். ஆனால் ஊர்ந்து செல்ல நான் பாம்பா? பல்லியா? என்று அவர் கேட்கிறார். பாம்பு, பல்லியை விட பழனிசாமிக்கு விஷம் அதிகம். இப்போது அவர் தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துகிறார். பிரியாணி பொட்டலமும், பலானா கவனிப்புகளுடன் கூட்டிவரப்படும் அந்த கூட்டம், உணர்ச்சியே இல்லாமல் அவரது பேச்சை கேட்கிறது.

இப்போது அந்த கூட்டத்திலும் பலர் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இங்கு வந்திருப்பது உணர்ச்சி மிகுந்த கூட்டம். எதுவும் பேசாமல் உங்கள் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாமா? என்ற ஆசை எனக்கு ஏற்படுகிறது. ஜெயலலிதா இறந்த பிறகு கடந்த 4 ஆண்டு ஆட்சியில் என்ன சாதனை செய்தார் என்பதை பழனிசாமியால் கூற முடியுமா? ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கொண்டு வந்த சாதனை திட்டங்களை பட்டியலிட்டு நாம் ஓட்டு கேட்கிறோம். ஆனால் இவர் எதுவும் செய்து கிழிக்கவில்லை. இப்போது அதற்கு ஒரு பதிலை கூறியுள்ளார். 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி வெளிநாடுகளில் இருந்து ₹3லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்தேன் என்கிறார்.

இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். மாநாடு நடத்தியது உண்மை. இதற்காக முதல்வரும், சில அமைச்சர்களும் கோட்டும் சூட்டும் போட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றதும் உண்மை. ஆனால் 3லட்சம் கோடி முதலீடு எப்போது வந்தது? அதனால் எத்தனை தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது? எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்பதற்கு இதுவரை முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை. இதுகுறித்து மக்கள் மன்றத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் கேள்வி எழுப்பினேன். வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டதற்கும் பதில்இல்லை. தற்போது 27சதவீதம் முதலீடு வந்துள்ளதாக கூறுகிறார். ஆனால் எந்த இடத்தில் தொழிற்சாலைகள் வந்துள்ளது என்று தெரியவில்லை. 100சதவீதம் முதலீடு வந்தால் மட்டுமே வெற்றி என்பதை முதல்வர் உணர வேண்டும்.

இதேபோல் காவிரியை மீட்டேன் என்கிறார். காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வமாக கலைஞர் பெற்றுத்தந்தது போல் எந்த அதிகாரத்தையும் பழனிசாமி பெற்றுத்தரவில்லை. மத்தியஜல்சக்தி திட்டத்திற்கு கட்டுப்பட்டு காவிரி உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார் என்பேத உண்மை. குடிமராமத்து திட்டங்களால் நீர்நிலைகளை மீட்டேன் என்கிறார். பச்சை துண்டு போட்டு பணத்தை அடித்தது மட்டுமே இதிலும் நடந்துள்ளது. இதேபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தோம் என்ற அபாண்ட பொய்யையும் முதல்வர் கூறி வருகிறார்.

2014ம் ஆண்டு மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் மற்ற மாநிலங்களை போல, தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்று அறிவித்தனர். அதன்பிறகு 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து ெதாடர்ந்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி வந்தோம். இதற்கு பிறகு 2019ம் ஆண்டு 5ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடியை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார்கள். இப்போது 2021ம் ஆண்டு வந்துள்ளது. இன்னும் ஒரு இஞ்ச் அளவில் கூட வேலைகள் நடக்கவில்லை. இப்படி தமிழகத்திற்கு துரோகம் செய்தது பாஜக ஆட்சி. அதற்கு துணையாக இருப்பவர் பழனிசாமி.

சமீபத்தில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதற்கும் பிரதமர் வருவதாக இருந்தது. இது கலைஞரால் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் என்று நான், மோடிக்கு கடிதம் எழுதினேன். ரூ.165கோடியில் கட்டளை பகுதியில் கதவணை அமைக்கும் பணியை அதிமுக நிறுத்தி விட்டது என்றுதெரிரிவித்தேன். இதை புரிந்து கொண்ட பிரதமர் விழாவிற்கு வரவில்லை. ஆனாலும் அவர் இல்லாமலேயே அடிக்கல் நாட்டியுள்ளார் பழனிசாமி. தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூறுகிறார். அரசு மின்சாரத்தை உற்பத்தி செய்து மிச்சம் உள்ளதை மற்றமாநிலங்களுக்கு விற்றால் மட்டுமே மின்மிகை மாநிலம் என்று கூற வேண்டும். ஆனால் இவர்கள் கமிஷனுக்காக வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மின்சாரத்தை வாங்கி விட்டு, மின்மிகை மாநிலம் என்கின்றனர்.

அதிலும் மின்துறை அமைச்சர் தங்கமணி சைலண்டாக கொள்ளை அடிப்பவர். உள்ளாட்சியை நல்லாட்சி என்று நான் அமைச்சராக இருந்தபோது சொன்னார்கள். இப்போது அந்த துறையில் வெளிப்படையாக கொள்ளையடிக்கும் அமைச்சர் வேலுமணி, அதை ஊழல் ஆட்சி துறையாக மாற்றி வைத்துள்ளார் என்பதே உண்மை.டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக மாற்றினேன் என்கிறார் முதல்வர். ஏற்கனவே அங்கு செயல்படுத்தப்படும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவே இந்த அறிவிப்பு என்பதை விவசாயிகள் உணர்ந்துள்ளனர். இப்படி எதையும் செய்யாமல் சாதனை, சாதனை என்று முதல்வர் கூறுவது தான் பெரும் வேதனை.

இங்குள்ள உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு, முதல்வருக்கு வலது கையாக இருக்கிறார். தமிழகம் முழுவதும் விடப்படும் டெண்டர்களுக்கு அவர் தான் பொறுப்பு. ஆளுங்கட்சி எம்எல்ஏ இப்படி என்றால் அமைச்சர்களின் நிலை வேறுவிதமாக உள்ளது. நேற்று அமைச்சர்களின் ஊழல், சொத்துக்கணக்கு என்ற பெயரில் அம்பலமாகி உள்ளது. தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கணக்கில் துணைமுதல்வருக்கு 409%, அமைச்சர்கள் ராஜலட்சுமி 356%, ஆர்பி உதயகுமார் 475%, செல்லூர்ராஜூ 445%, குட்காவிஜயபாஸ்கர் 576%, கேபி.அன்பழகன்684% சதவீதம் என்று சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினாமிகள், உறவினர்கள், ஆதரவாளர்கள் பெயரில் அவர்கள் சேர்த்துள்ள சொத்துக்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கும். முதல்வர் முதல் கடைநிலை அமைச்சர்கள் வரை அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, உரிய தண்டனை வழங்கப்படும். இது மக்களின் பணம். எனவே யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் சும்மாவிட மாட்டேன். அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்களை முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் கொச்சைபடுத்துகின்றனர். அவர்களை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் இழிவுபடுத்துகின்றனர்.

கலைஞர் மகனான நான், என்றென்றும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பக்கபலமாக இருப்பேன். அதேபோல் ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்ட திருத்தங்களையும் தமிழகம் ஏற்காது என்பதே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் முதல் தீர்மானமாக இருக்கும். மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும், ஒவ்வொரு தொகுதிக்கும் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்படும். 50 ஆண்டுகாலம் பின்தங்கிய தமிழகத்தை மீட்கவும், இழந்த உரிமைகளை பெறவும், தொழில்வளம் பெருகவும், இந்தி திணிப்பு, நீட்தேர்வு, மதவாத சக்திகளுக்கு முடிவு கட்டவும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *