சசிகலா அதிமுகவில் இணைவதை பரிசீலிக்கலாம்.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டியால் பரபரப்பு..!
சசிகலா அதிமுகவில் இணைவதை பரிசீலிக்கலாம்” என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் சொல்லி உள்ள கருத்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மார்ச்-23

சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவதற்கு 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்று கடந்த ஜனவரி 19 ஆம் தேதியே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பேட்டியளித்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 23) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சசிகலா பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
சசிகலா அரசியலை விட்டு விலகும் முடிவை வரவேற்கிறேன். சசிகலா மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. இப்போது என்று இல்லை. எப்போதுமே அவர் மீது எனக்கு வருத்தம் கிடையாது. அம்மா மறைந்த பிறகு அவர் மீது சில சந்தேகங்கள் இருந்தது. அதற்காக விசாரணை வைத்து அவரை நிரபராதி என்று நிரூபிப்பதற்காகத்தான், நான் நீதி விசாரணை கோரினேன். தவிர அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. நான் அவருடன் பழகியிருக்கிறேன். 32 வருடம் அம்மாவோடு அவர் பயணித்திருக்கிறார். அவர் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்தது கிடையாது. சசிகலா அம்மாவுடன் இருக்கும்போது அம்மாவுக்கு நன்மைகள் செய்தார் என்ற நல்லெண்ணம் எங்களுக்கு இருக்கிறது” என்று பேசிய ஓ.பன்னீர் செல்வம், சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் அவரை ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “முதலமைச்சர் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை சசிகலா நான்கு ஆண்டுகாலம் தண்டனையை அனுபவித்து விட்டு வந்திருக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும்போது அம்மாவுடன் 32 ஆண்டு காலம் பயணித்தவர் என்ற அடிப்படையில் அம்மாவுக்கு பல உதவிகள் நன்மைகள் செய்தவர் என்ற அடிப்படையில் அவர் அதிமுகவுக்கு வந்தால் அதை பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.