இந்த தேர்தலோடு திமுகவை தகர்த்தெறியுங்கள்.. ஜி.கே.வாசன் ஆவேசம்

தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் தி.முக.வை தகர்த்தெறியுங்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆவேசமாகக் கூறினார்.

போடிநாயக்கனூர், மார்ச்-23

போடி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். போடி தேவர் சிலை திடலில் அவர் பேசியதாவது:-

அனைவராலும் மதிக்கக்கூடியவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கட்சி பாகுபாடின்றி அனைவரையும் மதிப்பவர் துணை முதல்வர். போடி சட்டப்பேரவை தொகுதி சிறந்த பெயர் பெற்ற தொகுதி. வேளாண்மைத் துறையில் சிறப்புப் பெற்ற தொகுதி. போடி தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி போன்றவை கொண்டுவரப்பட்டு கல்வியில் முன்னேற்றமடைந்த மாவட்டமாக மாற்றியவர் துணை முதல்வர்.

போடி-மதுரை அகல ரயில் பாதை திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியடைந்த தொகுதியாக போடி தொகுதியை மாற்றியிருக்கிறார். அனைத்து துறையிலும் முன்னேற்றமடைந்த தொகுதியாகவும் மாற்றியுள்ளார். போடி தொகுதியை மட்டுமல்ல தென் மாவட்டத்தை வளர்ச்சியடையச் செய்வதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவரத் துணை புரிந்தவர் துணை முதல்வர்.

தமிழகம் முழுவதும் உளள அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற அடித்தளமிட்டுச் செயல்பட்டு வருபவர் துணை முதல்வர். விவசாய கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து, மகளிர் சுமையைக் குறைக்க ஆண்டு தோறும் விலையில்லா 6 சிலிண்டர்கள், வீட்டுக்கொரு வாசிங் மெசின், இல்லத்தரசிகளுக்கு ரூ.1500 என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது அ.தி.மு.க. அரசு.

போடி தொகுதியின் வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சியாகும். துணை முதல்வராக இருந்தபோதும், முதல்வராக இருந்த போதும் மக்களின் எண்ணங்களை செயல்படுத்தி வருபவர் துணை முதல்வர். 10 வருட காலம் தமிழகத்தின் வளச்சியை தி.மு.க. நிறுத்த பார்க்கிறது. வளர்ச்சியை தி.மு.க. தடுக்க பார்க்கிறது. வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களைத் தகர்த்தெறிய வேண்டியது உங்கள் கடமை. பொறுப்பு. தொகுதிக்கு, நாட்டுக்கு நல்லது செய்பவர்களை அடுக்கடுக்காக பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பவாத கூட்டணியாக தி.மு.க. கூட்டணி அமைந்துள்ளது.

கரோனா காலத்தில் நிவாரணத்தொகை, பொங்கல் நிவாரண தொகை போன்றவற்றை பொதுமக்களுக்கு தருவதை எதிர்த்தவர்கள்தான் தி.மு.க.வினர். சட்டப்பேரவைக்கே செல்லாதவர்கள் தி.மு.க.வினர். அப்படிப்பட்ட தி.மு.க.வினர் துணை முதல்வரைப் பற்றிப் பேசுவதற்கே தகுயில்லாதவர்கள். மகளிருக்கான திட்டங்களிலே இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத்தும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். 38 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பவர் ஓ.ப.ரவீந்திரநாத். இந்த மக்கள் பணி தொடர துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு வாசன் கூறினார்.

ஜி.கே.வாசன் பிரசாரத்தின்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *