நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு..கமல் பேச்சு

நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை, மார்ச்-23

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசார நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்துள்ளதால் எனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் நன்றாக வாழவேண்டும் என நினைத்துதான் அரசியலுக்கு வந்துள்ளேன்’ என்றார்.

’’எல்லா ஊர்களில் இருக்கும் பிரச்னைகளுக்கான திட்டங்களுடன் தான் மக்களை சந்திக்க வந்திருக்கிறோம். ரோஷத்தோடு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள். ஸ்டாலின், எடப்பாடி எல்லாம் சொல்வதை வைத்து பார்க்கையில் நம் பணம் ரூ.30 லட்சம் கோடி பறிபோகியுள்ளது.அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி, சுற்றுப் புறச்சூழல் கொடுப்பதே மக்கள் நீதி மய்யத்தின் குறிக்கோள். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களை பற்றி பேசினால் மட்டும் போதாது. அதற்கான வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நான் வரும் போது வண்டியில் சோதனை செய்தார்கள். என்னிடம் நேர்மை, வியர்வையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. டீ குடிக்க சில்லறைகள் வைத்திருக்கிறேன். என்னை சோதனை செய்தது சரி தான். கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்தார்களே அவர்களை எல்லாம் யார் கேட்டார்கள்?
என கமல் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *