இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்..வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா..!!

ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி பெற்றது.போர்க்குற்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களிக்க இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது.

ஜெனிவா, மார்ச்-23

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில் 10 ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து, தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில், இனப்படுகொலை குற்றங்களைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெற இருந்தது.

இந்தச் செயலுக்கு இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், `இந்தியா எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளது’ என்று அதிகாரபூர்வமாகவே அந்த நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பின்போது இந்தியா, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன.

இதற்கு முன்னர் 2009, 2012, 2013, 2014 ஆகிய நான்கு முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மூன்று முறை மட்டுமே வாக்களித்துள்ளது. 2014ம் ஆண்டு வாக்களிக்கவில்லை. தற்போது நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறவில்லை. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கையை வைத்துவரும் நிலையில், இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட இருந்த நிலையில், அது இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இலங்கைக்கு எதிராக இன்று ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள்களும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. மொத்தமுள்ள 47 நாடுகளில் பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நேதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவாகவும், சீனா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், நேபாள், டோகோ உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன. இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வேண்டுக்கோள் விடுத்திருந்தனர். ஆனால், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் தமிழக அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது தமிழகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *