ஏப் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மார்ச்-23

கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இணை நோய்கள் இருப்போர் மற்றும் இல்லாதோர் அனைவரும் தடுப்பூசி செலுத்தலாம். 2-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தும்போது, இணை நோய்கள் இருந்தால் மருத்துவரிடம் சான்று பெற்று வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்தச் சான்றும் பெறத் தேவையில்லை.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரித்து வருதையடுத்து, தடுப்பூசி போடும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக, அறிவியல் வல்லுநர்கள், மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பின், மத்திய அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட பின் 2-வது டோஸ் செலுத்தும் காலம் 28 நாட்களில் இருந்து 8 வாரங்களுக்குப் பின் செலுத்த வேண்டும் என நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், மருந்தின் செயல்திறனை அதிகப்படுத்த மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைக்குப் பின் முடிவு எடுக்கப்பட்டது.

இதுவரை 4.85 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஏராளமானோர் 2-வது டோஸ் மருந்தும் செலுத்தியுள்ளனர். 32.5 லட்சம் டோஸ் மருந்துகள் நேற்று செலுத்தப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 3.77 லட்சம் பேர் நாள்தோறும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மார்ச் மாதம் நாள்தோறும் 15 லட்சமாக உயர்த்தியுள்ளோம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்ட் இரு மருந்துகளும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. பிரதமர் மோடிகூட கோவாக்ஸின் தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டார். ஆதலால், எந்தத் தடுப்பு மருந்தையும் தகுதியான வயதினர் எடுக்கலாம். இரு மருந்துகளுக்கு இடையே இடைவெளி எத்தனை நாட்கள் என்பது மருத்துவரின் ஆலோசனைப்படி இருக்க வேண்டும்”.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *