பஞ்சாப்பில் 401 மாதிரிப் பரிசோதனைகளில் 81% பேர் உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் 401 மாதிரிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 81% பேர் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சண்டிகர், மார்ச்-23

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் இந்த மாதத் தொடக்கத்தில் 401 பேரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் குறித்து மரபணு பரிசோதனை செய்ததில், அதில் 81 சதவீதம் பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தகுதியுள்ள வயதினர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயதினரையும் மத்திய அரசு பரவலாக்க வேண்டும்.
அதாவது தற்போது குறைந்தபட்சமாக 45 வயதுள்ள இணைநோய்கள் இருப்போருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில் தடுப்பூசி செலுத்தப்படும் வயதைப் பரவலாக்க வேண்டும்.

ஏனென்றால், பஞ்சாப்பில் சமீபத்தில் 401 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, கடந்த 1-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை தேசிய பயோலாஜிக்கல் நிறுவனம், ஐஜிஐபி, எசிடிசி ஆகியவற்றுக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 81 சதவீதம் பேரின் மாதிரிகள் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

ஆதலால், பிரதமர் மோடி தடுப்பூசி போடும் வயதினரைப் பரவலாக்க வேண்டும். அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *