தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து

சென்னை, மார்ச்-22

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எனினும், 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

ஆனால், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியதால், மாணவர்களின் நலன் கருதி 9, 10, 11ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டபோதிலும், ஆன்லைன்/டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12ம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி நேரடி வகுப்புகளாலும் கொரோனா பரவும் அபாயம் இருந்தது. எனவே, தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். 23-03-2021 தேதி முதல் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மற்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகளிலும் வகுப்புகள் இணையவழி முறையில் வாரத்தில் ஆறுநாட்கள் தொடர்ந்து நடைபெறும். அறிவியல், பொறியியல் மற்றும் பலவகைத்தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு குறிப்பாக இறுதி பருவ மாணாக்களுக்கு செயல்முறை வகுப்புகள் மற்றும் செயல்முறை தேர்வுகள் 31-03-2021க்குள் முடித்திடவும், மேலும் இந்த பருவத்திற்கான இறுதித்தேர்வுகளை இணைய வழியில் மட்டுமே நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *