கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர், நவம்பர்-02

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து முருகன் அருளை பெற்றனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 28-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் இருந்து வந்தனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறிய சூரனை சுவாமி வதம் செய்தார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் மனிதத் தலைகளாக காணப்பட்டன. திரளாக கூடியிருந்த பக்தர்களின் கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் விண்ணை பிளந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண திருச்செந்தூருக்கு வந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *