எங்க போனாலும் பணம் எவ்வளவு வாங்கினனு கேட்கறாங்க.. தேர்தலில் இருந்து விலகிய மன்சூர் அலிகான்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். எங்கு சென்றாலும் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என கேட்பதால் தேர்தலில் போட்டியின்றி விலகுவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்தார்.

கோவை, மார்ச்-22

நாம் தமிழர் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக இவர் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் தேச புலிகள் என்ற கட்சியை தொடங்கினார்.

முதலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். பின்னர், திடீரென்று தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அங்கு அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணியும் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்கள்.

கடந்த சில நாட்களாகவே தொண்டாமுத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்துவந்தவர், திடீரென்று தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தொகுதியில் எங்குச் சென்றாலும் எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு போட்டியிடுகிறாய் என்று கேட்கிறார்கள் என்று அது தனக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிக்க தேர்தலில் போட்டியிடுவதாக நினைப்பது தனக்குக் கஷ்டமாக இருப்பதாகவும் அவர் கூறினார். தொகுதியில் சில இடங்களுக்குச் சென்றபோது, அமைச்சர் வேலுமணிக்கு நல்ல பெயர் இருந்ததாகவும், தொண்டாமுத்தூர் தொகுதியில், அமைச்சர் வேலுமணி சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் என்றும்  இதைத் தவிர தனக்கு அரசியல் தெரியாது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *