குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000.. அசாமில் ராகுல்காந்தி வாக்குறுதி

அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 தரப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் 365 ரூபாய் வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

திப்ருகர், மார்ச்-19

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில் தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. நேற்று பிரதமர் மோடி அசாமில் பிரசாரம் செய்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். திப்ருகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

அசாமில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் ரூ.351 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், 167 ரூபாய் வழங்குகிறது. நான் நரேந்திர மோடி அல்ல. நான் பொய் சொல்லமாட்டேன். தேயிலைத் தொழிலைப் பொறுத்தவரை, உங்கள் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு சிறப்பு அமைச்சகத்தை நாங்கள் ஏற்படுத்துவோம். எங்கள் தேர்தல் அறிக்கையானது தேயிலைத் தோட்ட பழங்குடியினர் மற்றும் மக்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டுள்ளது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் தயாரிக்கப்படவில்லை. அசாம் மக்களுக்கு நாங்கள் 5 உத்தரவாதங்களை கொடுக்கிறோம்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் 365 ரூபாய் வழங்கப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். ஒரு வீட்டிற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும். மேக் இன் இந்தியா பற்றி மோடி பேசுகிறார். ஆனால் நாம் பயன்படுத்தும் செல்போன், சட்டைகளில் மேட் இன் சீனா என்று உள்ளது. அதில் மேட் இன் இந்தியா, மேட் இன் அசாம் என்று பார்க்க முடியாது. குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு சாதகமாக பாஜக இருப்பதால் நம்மால் இதை பார்க்க முடியாது.

இவ்வாறு ராகுல் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *