தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்காத காரணத்தால், அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை, மார்ச்-19

பெருந்துறை தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டாலும் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு சீட் வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சென்னையில் கட்சி தலைமையை அணுகி முறையிட்டார். கட்சிக்கு உண்மையாக இருப்பதாக பேட்டியும் அளித்தார். இந்த நிலையில், பெருந்துறை தொகுதியின் சுயேச்சை வேட்பாளராக தோப்பு என்.டி.வெங்கடாசலம் நேற்று மனுதாக்கல் செய்தார்.

ஆளும்கட்சியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து, கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த அவர் கட்சியின் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் பெருந்துறை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை அவர் அளித்தார்.

இந்நிலையில் தோப்பு வெங்கடாசலத்தை அதிமுகவில் இருந்து நீக்கி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உணடாகும் விதத்தில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும் ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *