திமுக ஆட்சி அமைந்தால் கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும்.. தயாநிதிமாறன் எம்.பி.
திமுக ஆட்சி அமைந்த பிறகு கலைஞர் பிறந்த தினத்தில் கொரோனா நிவாரண தொகை 4,000 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் என்று திமுக எம்.பி. தயாநிதிமாறன் கூறியுள்ளார்.
சென்னை, மார்ச்-19

மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பேரன் வெற்றி அழகன் போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்த தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை மறைக்கவே முதல்வரும், துணை முதல்வரும் முயற்சி எடுத்துள்ளதாக புகார் கூறினார். விசாரணை ஆணையம் அமைத்து நான்கரை ஆண்டுகள் ஆகியும், உண்மை வெளிவரவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து கொங்குமண்டலத்தில் பிரச்சாரம் செய்ததாக தயாநிதிமாறன் கூறினார். கொங்கு மண்டலம் திமுக கோட்டையாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். அதனை ஏற்க மறுத்த தமிழக அரசு வெறும் 1000 ரூபாயை நிவாரணமாக வழங்கியது. ஆனால் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஜூன் 3ம் தேதி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த தினத்தில் கொரோனா நிவாரண தொகையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4000 ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.