ஓ.பி.எஸ். மகனைத்தான் வாரிசு அரசியல் என முதல்வர் பேசி வருகிறார்.. மு.க.ஸ்டாலின் பதிலடி

திருப்பத்தூர், மார்ச்-18

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் குணசேகரன், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் தமிழரசி, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ஓ.பி.எஸ். மகனை நினைத்து வாரிசு அரசியல் என முதல்வர் பழனிசாமி பேசிவருகிறார். முதல்வர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார்; பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். பதவி கொடுத்தவர்களுக்குத் துரோகம் செய்து பாவம் செய்த முதல்வரைத்தான் கடவுள் தண்டிப்பார்” என்றார்.

நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘’வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். திமுகவின் குடும்ப அரசியல் ஒழியக்கூடிய தேர்தல் இந்த தேர்தல். இந்த தேர்தலோடு திமுக குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் வரலாம், கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை. அதனால் வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களித்து திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று பேசினார்.

‘ஸ்டாலினை கடவுள் தண்டிப்பார்’ என முதல்வர் கூறிய நிலையில் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *