இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு… முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

நாகை, மார்ச்-18

நாகை அவுரித்திடலில், நாகை சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரும், நாகை நகர செயலாளருமான தங்க.கதிரவனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 18) வாக்கு சேகரித்து பேசியதாவது:-

“நாங்கள் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று பொய் பேசி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தடைகளை, சோதனைகளை தாண்டி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார். அவர் வழிவந்த நாங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம்.

திமுகவுக்கு குடும்பம்தான் ஆட்சி. கருணாநிதி அவருக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி என்று திமுகதான் குடும்ப அரசியலை நடத்தி வருகிறது. நீங்கள் என்ன அரச பரம்பரையா, திமுகதான் ஊழல் கட்சி. ஊழல் என்ற வார்த்தை உருவானதே திமுக ஆட்சியில்தான்.

நாங்கள் செய்ததை சொல்கிறோம். செய்யப்போவதை சொல்கிறோம். வீராணம், பூச்சி மருந்து ஊழல், அரிசி ஊழல். இவை எல்லாம் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தமிழகத்தில் சாதி சண்டை, மத சண்டை கிடையாது. சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. நான் ஆட்சி செய்த இந்த நான்கரை ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அவர்கள் நிம்மதியாக தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களை பாதுகாப்பது அதிமுக ஆட்சிதான். அதிமுக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கட்சி என்பது போன்ற மாயையை ஓட்டுக்காக உருவாக்கி வருகிறார்கள். அது நடக்காது”.

இவ்வாறு அவர் பேசினார்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அ.தி.மு.க வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தார். விவசாயிகளின் பாதிப்பை உணராமல் அவர்களது நிலங்களை பிடுங்கி தனியாரிடம் ஒப்படைக்க முற்பட்டார்கள். அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றாமல் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர்.

ஸ்டாலின் விவசாயிகளின் நிலத்தை பறிக்க நினைத்தார். அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியவர் இந்த பழனிசாமி. ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலை இல்லை. எனவே, ஸ்டாலினுக்கு விவசாயிகளின் ஓட்டு கூட கிடைக்காது.

2010 காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதன்பின், ஜெயலலிதா நீட் தேர்வை தடுக்க கடுமையான முயற்சி எடுத்தார். தற்போது, நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கூடாது என்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு. கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் விருதுகளை வாங்கியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி என்பதால் தொப்பி அணிந்தபடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *