1000 பேருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்த எல்.முருகன்..!

தாராபுரம், மார்ச்-18

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்(தனி) தொகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தாராபுரம் உடுமலை சாலை ரவுண்டானா அருகில் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இருக்க கூடிய பா.ஜ.கவினர், பணிமனை முதல் சார் ஆட்சியர் அலுவலகம் வரை திறந்த வேனில் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர். அலுவலகம் அருகே சென்றதும் வேட்பாளர் எல்.முருகன் மற்றும் தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிஷ்ணன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி மகேந்திரன் ஆகியோருடன் சென்று சப்-கலெக்டர் பவன் குமாரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

வேட்பு மனுதாக்கல் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கி‌ஷன் ரெட்டி, கர்நாடக அமைச்சர்கள் பசவராஜ், வைத்திலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு, அதற்கான வைப்புத் தொகை ரூ.5,000 செலுத்தப்பட்டது. அந்தத் தொகையில், ரூ.4,000 அளவுக்கு 10 மற்றும் 20 ருபாய் நோட்டுகளும், ரூ.1000-க்கு ரூ.5 மற்றும் ரூ.2 நாணயங்களும் கொடுக்கப்பட்டன. மக்களிடம் இருந்து தொகையைப் பெற்று வேட்புமனு வைப்புத்தொகை செலுத்தப்பட்டதாக பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வெற்றி வித்தியாச தேவைக்காகத்தான் வேலை செய்து வருகிறோம். தாராபுரத்தின் வளர்ச்சி மற்றும் தாராபுரத்தின் மேம்பாடு ஆகியவை தொடர்பாகத்தான் எங்களது செயல்பாடுகள் இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *