கல்வி, மருத்துவம், குடிநீரை இலவசமாக வழங்குவோம்.. சீமான் அதிரடி
கடலூர், மார்ச்-18

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கடல்தீபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசும்போது, “தென் மாவட்டமான சிவகங்கையைச் சேர்ந்த நான், முதலில் வட மாவட்டத்தில் உள்ள கடலூரில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதற்கு காரணம், தமிழர்களுக்கென பொதுவான ஒரு தலைவர் இல்லை என்றுதான்.
மேலும் இருக்கிற எல்லோரும் சாதி, மத தலைவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் அல்லாதவர்கள்தான் தமிழர்களுக்கு இன தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையை என்னுடைய சிறு வயதில் இருந்தே அறிந்தவன் நான். தென் மாவட்டத்தில் எங்கு நின்றாலும் சாதி அடையாளம் வரும். அந்த முத்திரை, அடையாளம் வரக்கூடாது என்பதற்காகத்தான் கடலூரில் வந்து நின்றேன். தமிழ்நாட்டை அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. அரை நூற்றாண்டு காலம் தமிழகம் வளர்ச்சி அடையவில்லை.
கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவை மிகப்பெரிய சந்தை பொருளாக, வியாபாரப் பொருளாக மாறிவிட்டன. தொடர்ந்து ஆட்சியில் இருந்து நம்மை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சாமிக்காக அரசியல் செய்யாமல், வாழும் பூமிக்காக அரசியல் செய்கிறோம். தண்ணீரை தவிர எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தத்துவம் என்று எதுவும் கிடையாது. தமிழகத்தின் நிலையை மாற்ற ஒரு ஓட்டு தேவை. அதை நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் அளிக்க வேண்டும். அதன் பிறகு நான் நாட்டை பார்த்துக்கொள்கிறேன்.
காவல்துறையில் ஆண்களுக்கு 8 மணிநேரமும், பெண்களுக்கு 6 மணிநேரமும் பணிநேரம் நிர்ணயிக்கப்படும். சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும். 6 மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல வாய்ப்பளிக்கப்படும். பாலின் சந்தை மதிப்பு மட்டும் இந்த நாட்டில் 3 லட்சம் கோடியாக உள்ளது. டாஸ்மாக் கடையில் இருந்து 25 ஆயிரம் கோடி தான் வருகிறது. டாஸ்மாக் கடையை தூக்கிவிட்டு தற்சார்பு பசுமை கொள்கையை நோக்கி போவோம். டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கல்வியின் தரத்தை உயர்த்தியதால் மறுபடியும் அவருக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். அதிமுக, திமுக ஆட்சியில் வாழ்ந்து பார்த்த நீங்கள் ஒரே ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள். ஊழலற்ற, பசி பஞ்சமற்ற நாடாக மாற்றி காட்டுகிறோம் ” என்றார்.