நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வை திணிப்பதா?.. மத்திய அரசு திரும்ப பெற கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை..!

பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வை திணிப்பதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, மார்ச்-18

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேசியத்தேர்வு முகமை 2021-2022 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த இளங்கலை பட்ட மாணவர் சேர்க்கைக்கு மட்டுமன்றி இனிமேல் இளங்கலை செவிலியர் (பிஎஸ்சி நர்சிங்) இளங்கலை உயிர் அறிவியல் (பிஎஸ்சி லைப் சயின்ஸ்) ஆகியவற்றிற்கும் நீட் தேர்வு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

தேசியக் கல்வி கொள்கை 2020 பள்ளிகளை வேலைவாய்ப்புத்திறன் அளிக்கும் மையங்களாக சுருக்கி, தேசிய தகுதி காண் தேர்வு தான் அனைத்துப் பட்ட படிப்பிற்கும் தகுதியாக கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து மாநில அரசின் நிலைபாடு என்ன என்பது பற்றி இதுவரை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தவில்லை. எனினும், மருத்துவ சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள தேவைப்படும் பயிற்சிக்கான ஆசிரியர்களே மாநில அரசிடம் இல்லை என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். பட்ட படிப்பிற்கும், ‘நீட்’ தேர்வை திணிப்பது என்பது சமூச நீதிக்கும், சம கற்றல் வாய்ப்பிற்கும் எதிரானது ஆகும்.

குறிப்பாக, சமூகத்திலும், கல்வியிலும் பின் தள்ளப்பட்ட சமூகப்பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மாணவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலையினர் மற்றும் பெண்களுக்கான உயர்கல்வி வாய்ப்பை தட்டி பறிக்கவே நர்சிங் மற்றும் உயிரி அறிவியல் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை இந்த சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும். 2021-2022 கல்வி ஆண்டிற்கான அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் மாணவ-மாணவியரின் மேல்நிலைப்பள்ளி மதிப்பீடு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *