தஞ்சாவூரில் முகாமிட்டுள்ள சசிகலா.. குலதெய்வ கோவிலில் வழிபாடு..!

தஞ்சாவூர், மார்ச்-18

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கி இருந்தார். தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முதலில் கூறிய அவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அசியலில் இருந்து விலகுவாக அறிவித்தார்.

இந்த நிலையில் திடீரென சென்னையில் இருந்து சசிகலா காரில் தஞ்சைக்கு நேற்று இரவு வந்தார். தஞ்சை அருளானந்த நகரில் உள்ள தனது கணவர் நடராசனின் வீட்டில் தங்கினார்.இந்நிலையில் இன்று தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் உள்ள அவரது குல தெய்வமான வீரனார் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். அவருடன் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்கங்களுக்கு சன்னதி கொண்ட தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் விளங்கிவருகிறது. அந்தக் கோயிலுக்கு சசிகலா இன்று பகல் 11 மணிக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பளித்தனர். விநாயகரை வழிபட்டுவிட்டு பின்னர் கோயிலுக்குள் வந்த சசிகலா 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்துக்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார்.

தொடர்ந்து மகாலிங்கசுவாமி, சுந்தர குஜாம்பாள், மூகாம்பிகை அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் அமைதியாக சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலுக்கு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களையும் குடைகளையும் தானமாக வழங்கினார். அப்போது செய்தியாளர்கள் பேட்டியெடுக்க முயன்றபோது, “நான் அரசியலுக்காக வரவில்லை, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன்” என கூறிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.

அப்போது செய்தியாளர்கள் பேச முயன்றபோது, கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன் என கூறிவிட்டு, காரில் ஏறிச் சென்றார்.

இதையடுத்து அவர் நடராசனின் தம்பி பழனிவேலின் பேரக்குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்கிறார்.
வருகிற 20-ந் தேதி நடராசனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமாகும். அன்று விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள நடராசனின் சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்துவார் என தெரிகிறது.

தேர்தல் நேரத்தில் சசிகலா தஞ்சைக்கு வந்தது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அவரை அரசியல் பிரமுகர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *