சுயேச்சையாக மனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் எம்.எல்.ஏ அதிமுகவில் இருந்து நீக்கம்
சேலம் சேந்தமங்கலம் தனித் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனைக் கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
சென்னை, மார்ச்-18

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தனித் தொகுதியாகும். இது மலைவாழ் மக்கள் போட்டியிடும் தொகுதியாகும். இத்தொகுதியில் 2016-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரசேகரன் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
தற்போது 2021 பேரவைத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சேந்தமங்கலம் தொகுதியில் அடங்கியுள்ள கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்திரசேகரன் தனது ஆதரவாளர்களுடன் தலைமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். தனது தொகுதியில் 5 ஆண்டுகளாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து மக்கள் அபிமானத்தைப் பெற்றுள்ள தனக்கு வாய்ப்பளிக்காமல் மரம் கடத்தல் உள்பட பல்வேறு புகார்கள் உள்ளவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர் என சந்திரசேகரன் குற்றம் சாட்டியிருந்தார்.
தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு அமைச்சர் தங்கமணி காரணம் என்று சந்திரசேகரன் குற்றம் சாட்டியிருந்தார். சில தினங்களில் தலைமை அறிவித்த வேட்பாளரை மாற்றாவிட்டால் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என கெடு விதித்திருந்தார். இந்நிலையில் அவர் இன்று சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்று அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு:
”கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது மட்டுமல்லாமல், அதிமுக வேட்பாளரைத் தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ள காரணத்தாலும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ சந்திரசேகரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்”.
இவ்வாறு ஓபிஎஸ்- இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.