என் சொந்த பணத்துலதான ஹெலிகாப்டரில் போறேன், அரசுப்பணத்திலா போறேன்? – கமல் கேள்வி

கோவை, மார்ச்-18

கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.தங்கவேலு போட்டியிடுகிறார். இந்நிலையில் தங்கவேலு, தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான உ.முருகேசனிடம் இன்று (மார்ச் 18) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உடனிருந்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி 40 ஆண்டுகள் தொடர்ந்து நற்பணி செய்து வருபவர் தங்கவேலு. இதுபோன்ற நற்பணி செய்தவர்களின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும். திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம் என நினைக்கிறேன்.

பேருந்தில் சென்று கொண்டிருந்தவன் நான். என்னை ஹெலிகாப்டரில் செல்ல வைத்ததே மக்கள்தான். நான் அரசுப் பணத்தில் செல்லவில்லை. சொந்தச் செலவில் பயணிக்கிறேன். தேர்தல் பரப்புரைக்குச் செல்ல எனக்கு ஹெலிகாப்டர் தேவையில்லை. இருப்பினும், நான் சென்றடைய வேண்டிய இடங்களுக்கு குறுகிய நேரத்தில் செல்வதற்காகத்தான் ஹெலிகாப்டரைப் பயன்படுத்துகிறேன். எங்களின் கட்சிக் கூட்டங்களுக்கு எளிதாக அனுமதி கிடைப்பதில்லை. நான் மாணவர்களுடன் பேசிவிடக்கூடாது என்பதற்காக மறைமுகச் செய்தியை கல்லூரிகளுக்கு அனுப்பினர்.

எனக்குப் பல இடங்களில் இடையூறு செய்யத் தொடங்கி 2, 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிகூட இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டத்தை அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், கமல்ஹாசன் சொல்லும் இந்தத் திட்டம் அனைத்து கட்சியினரின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று தெரிவித்திருந்தார். அதுபோலவே, மற்றவர்களுக்கு நாங்கள் முன்னுதாரணமாகத் திகழ எங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்”.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *