மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு

மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக இருக்கும் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத சுமார் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர், மார்ச்-18

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் நிறுவனங்களின் உரிமையாளராக இருப்பவர் சந்திரசேகர். இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராகவும் உள்ளார். இவரது அனிதா டெஸ்காட் நிறுவனம் தமிழக அரசின் நலவாழ்த்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களில் ஒப்பந்ததராக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிரசவிக்கும் பெண்களுக்கு மகப்பேறு பை வழங்கும் ஒப்பந்தத்தை சந்திரசேகரனின் அனிதா டெஸ்காட் நிறுவனம் தான் வைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திடீரென திருப்பூரில் உள்ள அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில் இருந்து பெட்டி பெட்டியாக ரொக்கப்பணம் சிக்கியது. ஒட்டு மொத்தமாக சிக்கிய பணத்தின் மதிப்பு எட்டு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

அத்துடன் சந்திரசேகரிடம் விரைவில் விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு எதிராக புதிய அணி அமைத்து கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் களம் கண்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் கமல் நேரடியாக போட்டியிடுகிறார். இதே போல் தமிழகம் முழுவதும் சுமார் 159 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மிக முக்கிய நிர்வாகியான சந்திசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளதுடன் எட்டு கோடி ரூபாய் அளவிற்கு ரொக்கத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் தான் உள்ளது. அவர் கடந்த இரண்டு நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதே போன்று தாராபுரம் திமுக நகரச் செயலாளர் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த மதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டிலும் வருமான வரித்துறை முகாமிட்டுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் மநீம, திமுக மற்றும் மதிமுகவை வருமான வரித்துறை குறி வைத்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *