தாராபுரம் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை..!
சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்ட திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகளின் திடீரென ஐடி ரெய்டு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், மார்ச்-17

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுகவின் வேட்பாளராக கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவின் மாநில தலைவரும், தாராபுரம் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், தாராபுரம் சென்னியப்பன் நகரிலுள்ள திமுக நகர செயலாளர் கேஎஸ் தனசேகர் வீட்டிலும், அலங்கியம் சாலை மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அடுத்த சில நாட்களில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது திருப்பூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுவதை அறிந்த தாராபுரம் போலீஸார், சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திடீர் சோதனை நடவடிக்கை குறித்து தகவல் அறிந்த திமுக நிர்வாகிகள், வேட்பாளர், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சோதனை நடைபெற்ற இடங்களின் முன்பாகத் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.