அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவு அதிமுக அரசால்தான் நனவாகியுள்ளது.. முதல்வர் பெருமிதம்

விராலிமலை, மார்ச்-16

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் சி.விஜயபாஸ்கரை ஆதரித்து விராலிமலையில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது பேசிய முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சிறப்பான பணிக்கு மத்திய அரசே சான்றளித்துள்ளது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் அடுத்தாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 600 பேர் மருத்துவர் பயில்வர். கிராமப்புறங்கள் முதல் நகரம் வரை சிறப்பான சாலை வசதிகளை செய்து கொடுத்த அரசு அதிமுக அரசு. தமிழக மக்களின் துயரங்களை போக்குவதும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் அதிமுக அரசு தான். 7.5% உள் ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 435 பேரின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது. 7.5% உள் ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 17 பேர் மருத்துவம் பயின்று வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினவாக்கியது அதிமுக அரசின் சாதனை.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது அதிமுக அரசு ரூ.9,300 கோடி பயிர்க்காப்பீடு வாங்கிக் கொடுத்த அரசு அதிமுக அரசு. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களை அதிமுக அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும். பெண்களின் குடும்ப பணி சுமையை குறைக்க குடும்பத்திற்கு வாஷிங் மெஷின் வழங்கப்படும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *