ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்.. ஆதி திராவிடர் இல்லை என்ற சர்ச்சையால் அதிரடி

ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலினை மாற்றி, அத்தொகுதியில் சின்னதுரை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-16

ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக, சின்னதுரை போட்டியிடுவார் என, திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக்கழகம் இன்று (மார்ச் 16 ) வெளியிட்ட அறிவிப்பில், “சேலம் கிழக்கு மாவட்டம், 82. ஆத்தூர் (தனி) தொகுதியில், திமுகவின் சார்பாகப் போட்டியிட, ஏற்கெனவே ஜீவா ஸ்டாலினின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது, கு.சின்னதுரை பி.இ., ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவா ஸ்டாலின் ஆதி திராவிடர் இல்லை என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து இந்த வேட்பாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக, ஏ.பி.ஜெயசங்கரன் போட்டியிடுகிறார்.

ஆத்தூர் தனி தொகுதிக்கு ஜீவா ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. காரணம், அவர் ஆதிதிராவிடர் இல்லை என கூறப்பட்டது. ஜீவா ஸ்டாலின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் இந்த புகார் எழுந்தது. நேற்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் முன்புகூட இந்த சர்ச்சை நீடித்தது. இதனால் தற்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *