அப்பா ஸ்டாலினை விட மகன் உதயநிதியின் சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகம்..!!

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பை விட ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறைவாக உள்ளது.

சென்னை, மார்ச்-16

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி

2019-20-ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் வருமானம் ரூ. 28,79,120. மனைவி துர்காவின் வருமானம் ரூ. 4,73,000. ஸ்டாலினுக்கு மொத்தஅசையும் சொத்து ரூ. 4 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 792, மொத்த அசையா சொத்து ரூ. 2 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 410, மனைவி துர்காவின் அசையும் சொத்து ரூ. 30 லட்சத்து 52 ஆயிரத்து 854, மொத்த அசையா சொத்து ரூ. 1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 283 உள்ளது.

ஸ்டாலினின் அசையும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 7 கோடியே 19 லட்சத்து 6 ஆயிரத்து 202, மனைவி துர்காவின் அசையும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 99 ஆயிரத்து 137. ஸ்டாலினிடம் கார்கள், தங்க நகைகள் எதுவும் இல்லை. மனைவி துர்காவிடம் ரூ.24 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 720 கிராம் தங்க நகைகள் உள்ளன.

கடந்த 2016 -ல் ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4 கோடியே 13 லட்சத்து 83 ஆயிரத்து 988 ஆகவும், மனைவி துர்காவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 70 லட்சத்து 18 ஆயிரத்து 973 ஆகவும் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஸ்டாலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3 கோடி அதிகரித்துள்ளது. அவரது மனைவி துர்காவின் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 836 குறைந்துள்ளது.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ள தகவல் படி, அவரது பெயரில் ரூ.21 கோடியே 13 லட்சத்து ஒன்பதாயிரத்து 650 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 736 ஆகும்.

கையில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும், மொத்த வருமானம் ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 520 என்றும் கூறப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 730 மதிப்புள்ள 1,600 கிராம் மதிப்புள்ள தங்கம் உட்பட ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 மதிப்புள்ள அசையும் சொத்து இருப்பதாகவும், அவரிடம் ரூ.50 ஆயிரம் கையிருப்பு உள்ளதாகவும், மொத்த வருவாய் ரூ.17 லட்சத்து 44 ஆயிரத்து 470 என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை ஸ்டாலினை விட மகன் உதயநிதியின் சுமார் சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *