ஈபிஎஸ் சொத்து ரூ.1 கோடி குறைவு; ஓபிஎஸ் சொத்து, கடன் பலமடங்கு அதிகரிப்பு..!

வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவர பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து 1 கோடி குறைந்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொத்து 843% உயர்ந்துள்ளது.

சென்னை, மார்ச்-15

வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையே, கடந்த 12-ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தொடங்கியது.

அதன் அடிப்படியில், வேட்புமனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட போடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். போடி தொகுதியில் ஓபிஎஸ் 3-வது முறையாக போட்டியிடுகிறார். தொடர்ந்து, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முதல்வர் பழனிசாமி, எடப்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 7-வது முறையாக எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில், வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவர பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து குறைந்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொத்து உயர்ந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

வேட்புமனுவில் அளித்த சொத்து விவர பட்டியலில், கடந்த 2016ம் ஆண்டை விட 1 கோடி சொத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ரூ.3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து, 2021ம் ஆண்டு ரூ.2.01 கோடியாக சரிந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து மதிப்பு 2021ம் ஆண்டு ரூ.4.68 கோடியாக உள்ளது.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கடன் தொகை 33 லட்சத்து 73 ஆயிரமாக இருந்தது. 2021ம் ஆண்டு கடன் தொகை குறைந்து 29 லட்சத்து 75 ஆயிரமாக உள்ளது. ஆனால், 2016ம் ஆண்டு சொத்து விவர பட்டியலில், முதல்வர் பழனிசாமி, தனது பெயர், மனைவி ராதா, மகன் மீதுன், மருமகள் தீவ்யா ஆகியோர் பெயரில் சொத்து கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை சொத்து விவர பட்டியலில், முதல்வர் பழனிசாமி, தனது பெயர், மனைவி ராதா மற்றும் இந்து கூட்டுக்குடும்பம் என்ற அடிப்படையில் சொத்து கணக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி, முதல்வர் கையில் இருக்கும் தொகை ரொக்க பணம் 6 லட்சமும், மனைவி ராதாவிடம் கையில் இருக்கும் ரொக்க பணம் 2 லட்சமும், இந்து கூட்டுக்குடும்பத்தில் 11 லட்சம் கையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் பழனிசாமியிடம் அசையும் சொத்தில் நகைகள் 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிற்கும், மனைவி ராதாவிடம் 30 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிற்கும் நகை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அசையா சொத்துகளில் முதல்வர் பழனிசாமி பெயரில் எதுவும் இல்லை. மனைவி பெயரில், 1.78 கோடியாகவும், கூட்டுக்குடும்பத்தினர் பெயரில் 2.90 கோடி அளவிற்கு அசையா சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதில், மனைவியின் கடன் 14 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

வேட்புமனுவில் அளித்த சொத்து விவர பட்டியலில், கடந்த 2016ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொத்து 843% உயர்ந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ரூ.55 லட்சமாக இருந்த அசையும் சொத்து, 2021ம் ஆண்டு ரூ.5.19 கோடியாக உயர்ந்துள்ளது. இதனைபோல், அசையும் சொத்து 169% உயர்ந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் அசையா சொத்து 98 லட்சமாக இருந்தது. ஆனால், 2021ம் ஆண்டு 2.64 கோடியாக உயர்ந்துள்ளது. இதனைபோல், கடன் அளவும் 988% அதிகரித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடன் தொகை 25 லட்சமாக இருந்தது. 2021ம் ஆண்டு கடன் தொகை ரூ.2.72 கோடியாக அதிகரித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி பெயரில் ரூ.2.63 கோடிக்கான அசையா சொத்துக்கள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வீடு, நிலம் உள்பட அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *