6 லட்சம் கோடி கடன் இருக்கும்போது வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பீர்கள்? – சீமான் கேள்வி

தமிழகத்தின் கடன் ரூ.6 லட்சத்திற்கு மேல் இருக்கும்போது எப்படி வாஷிங் மெஷின் கொடுப்பீர்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, மார்ச்-15

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேர்தல் வரைவு திட்டம் வெளியிடாததற்கு காரணம் காசு இல்லை. உண்மையிலேயே அதுதான் காரணம். இந்த முறை திடீரென தேர்தல் வந்ததால் திட்டமிடுதல் இல்லை. நாளை வெளியிடப்படும். பணம் இருக்கிறவர்தான் அரசியல் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை ஒழிக்கவில்லை என்றால் முதலாளிகளின் லாபத்தை நோக்கிய அமைப்பாக மாறிவிடும்.

மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம்தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை. கமலுக்கு பிக்பாஸ் போதும். ஹெலிஹாப்டரில் போகலாம். அனல்மின் நிலையம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பிரச்னைகள்தான், நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட காரணம். உலக தரத்திலான கல்வி, மருத்துவம், குடிநீரை நான் உறுதியாக தருவேன். இதுதான் எங்கள் இலவசம் குறித்த வாக்குறுதி.

6 லட்சம் கோடி கடன் இருக்கிறது. 2 கோடிக்கு மேல் குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஒரு வாஷிங் மெஷின் ரூ.15 ஆயிரம் என வைத்துக்கொண்டால், பணம் எங்கிருந்து கொண்டு வருவீர்கள்? எங்கிருந்து பணம் வரும் என்பதற்கு திட்டத்தை வகுத்துச் சொல்லுங்கள். பொருளாதாரத்தைப் பெருக்கி அங்கிருந்து மக்களுக்குக் கொடுப்போம் எனச் சொல்லலாமே. தமிழக அரசில் எந்தத் துறையில் கடன் இல்லாமல் இருக்கிறது? நாட்டையும் நாட்டு மக்களையும் கடனாளியாக்கிவிட்டு, மறுபடியும் மறுபடியும் இலவசம் தருவோம் என வெற்று அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

என் அன்பு மக்களுக்குச் சொல்வது, தேடக்கூடாது. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என வழியே இல்லாமல் தேடக்கூடாது. நாங்கள் 10 ஆண்டுகளாக உறுதியாக நின்று போராடுகிறோம். எங்களைக் கவனியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *