ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம், எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை – பிரேமலதா பதிலடி

வெற்றிக் கூட்டணியை அமைப்பதில் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை, மார்ச்-15

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக அமமுக-தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை இறுதி செய்யப்பட்டது. இதில் 23 தனித் தொகுதிகள் உள்பட 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிகவுக்கு இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்காததை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணியில் வெளியேறியது ஏன்? என விளக்கம் அளித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக்கு வருகிறோம் என்ற தகவலறிந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவிருந்த ஜெயலலிதா, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி 41 தொகுதிகளை ஒதுக்கி அதிமுக- தேமுதிக கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றினார். அப்போதுதான் முதல்முறையாக அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டது.

இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி வழியாகத்தான் அதிமுகவினர் கூட்டணிக்கு வந்தார்கள். நாங்கள் ஒருபோதும் அதிமுகவுடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. அதிமுகவினர் வந்து விஜயகாந்தை சந்தித்தார்கள். இது அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் காலதாமதமாக 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதுவும் விரும்பாத தொகுதிகளே தரப்பட்டன. தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் அந்த கூட்டணி இழந்தது.

அதுபோன்றதொரு தோல்வி இந்த தேர்தலில் வந்துவிடக்கூடாது என்று சொல்லி விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று அதிமுகவினரிடம் வலியுறுத்தியும் கால தாமதம்தான் இருந்து வந்தது. ஆனால், தேமுதிக கெஞ்சியது என்று ஊடகத்தின் கூறினார்கள். ஆனால், இன்றைக்கு அது பொய்யானது, இறுதிநேரம் வரை தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

பக்குவம் இல்லாத அரசியலை தேமுதிக செய்கிறது என முதல்வர் பழனிசாமி கூறுகிறார். ஜெயலலிதா பக்குவமான அரசியலை செய்து தேமுதிகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி வெற்றிக் கூட்டணியாக மாற்றினார். ஆனால் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம், எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. பாஜக, பாமகவை அழைத்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தேமுதிகவை அழைத்தார்கள். அதுவும் 13 தொகுதிகள்தான் என்று கூறினார்கள். கடைசி நேரத்தில் சுதீஷ், முதல்வரிடம் பேசியபோதுகூட 13 தொகுதிகள் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். பின்னர் கூட்டணி உடையக்கூடாது என்பதற்காக 18 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டோம். ஆனால் அதிமுகவோ 13 தொகுதிகளில் இருந்து சற்றும் இறங்கவில்லை. மேலும், அந்த 13 தொகுதிகளின் விவரத்தையும் அவர்கள் தரவில்லை.

13 தொகுதிகள் எவை என கூறுமாறு சுதீஷ் கேட்டார், ஆனால் அதிமுகவோ முதலில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள், பின்னர் கூறுகிறோம் என்றார்கள். இதற்கு மாவட்டச் செயலாளர்களும் கேப்டனும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று சுதீஷ் கூற, உங்களுக்கு விருப்பமான முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என எடப்பாடி கூறிவிட்டார். இதுதான் உண்மையில் நடந்தது. அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் ஒன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த கூறினோம். ஆனால், கடைசி வரை அவர்கள் அதைச் செய்யவில்லை. பின்னர் தினகரன் எங்களுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக அரசியலில் சரித்திரம் படைக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *