நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ந்தேதி வரை ஒரு வார காலம் ஊரடங்கு..!
நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான காய்கறி, பழம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பால் பூத் உள்ளிட்டவை திறந்திருக்கும். மருந்து பொருட்கள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நாக்பூர், மார்ச்-15

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா அதிகரித்து வரும் பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வெளிப் பயணங்களைத் பொதுமக்கள் தவிா்த்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்தும் முடங்கியது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நாக்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து 1,033 பேர் மீண்ட நிலையில் 12 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி நாக்பூரில் 16,630 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான காய்கறி, பழம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பால் பூத் உள்ளிட்டவை திறந்திருக்கும். மருந்து பொருட்கள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு அமலான நிலையில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றை மூடும்படி உத்தரவிடப்பட்டன.