தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

கோவை, மார்ச்-14

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பிறகு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகின்றன. அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்து தனது பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் அதிமுக தேர்தல் பொறுப்பாளரான உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, “ஸ்மார்ட்டான கோவை சகோதரத்துவம் காக்கும் சேவை” என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கோவை மாவட்டத்திற்கு அவர் செய்த நலத்திட்டங்கள் காரணமாக, “கோவையின் சேவை நாயகன்” என்று கோவை மாவட்ட மக்களால் அழைக்கப்படுகிறார். ஏற்கனவே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அவர் பிரசாரத்தை மேற்கொண்டு வந்தாலும், களத்தில் இறங்கி பொது மக்களோடு நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரத்தில் அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பொதுமக்களிடையே அவர் வாக்கு சேகரித்தார். ஏற்கனவே கோவை மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதாகவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய மேம்பாலங்கள், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், மகளிர் கல்லூரி உட்பட ஐந்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கொண்டுவந்தது உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துக் கூறி தனது பிரச்சார பயணத்தை அவர் தொடங்கி உள்ளார். பிரச்சாரத்தின் போது சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவருக்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் S.P. வேலுமணி கோவை மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தேவையான அனைத்து நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது மக்கள் அளிக்கும் இந்த பேராதரவை பார்க்கும்போது முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் கழகத்தின் ஆட்சி மீண்டும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *