அரசியல் கண்ணியம் தெரியாத திமுக.. சென்னை கூட்டத்தில் கிழித்தெடுத்த ஒவைசி..!

காங்கிரஸுடன் கூட்டணி வைத்து கொண்டு திமுக மதச்சார்பின்மை குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்-13

அமமுகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தேர்தல் அறிக்கையை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஒவைசி, எஸ்டிபிஐ தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் வெளியிட்டனர்.

இக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஒவைசி பேசியதாவது,

”தேசிய கட்சியான எங்களை தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அவ்வாறு கொண்டு வரும் போது கூட்டணியில் இருந்து காயிதே மில்லத்தின் கனவுகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் இருந்து மாறி பிரதமர் மோடியின் வழியில் சென்று கொண்டிருக்கின்றன.

திமுகவில் சிறுபான்மையின தலைவர்களுக்கே மதிப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. எனவே, அந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் சிறுபான்மையின மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.

மேலும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மதச்சார்ப்பின்மை குறித்து திமுக பேசுவது வேடிக்கையாக உள்ளது. எங்களை பி டீம் என்று கூறும் திமுகதான் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. இங்கே ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக திமுகவும், காங்கிரஸும் வேஷம் போடுகின்றனர். காயிதே மில்லத் பெயரை சொல்லும் கட்சிகள் ஒரு சில சீட்டுகளுக்காக திமுகவுடன் நிற்கின்றன.

திமுக சாா்பில் சிறுபான்மையினா் பிரிவு மாநாடு நடத்தப்படுவதாகவும் அதில் பங்கேற்க வேண்டுமெனவும், அந்தக் கட்சியின் நிா்வாகி நேரில் வந்து எனக்கு அழைப்பு விடுத்தாா். உத்தர பிரதேசத்தில் வேறொரு நிகழ்ச்சி இருப்பதாகவும், திமுகவின் கூட்டத்தில் பங்கேற்பது சிரமம் எனவும் நான் அவரிடம் தெரிவித்தேன்.

ஆனால், திமுகவின் கூட்டத்தில் பங்கேற்றே ஆக வேண்டுமென அந்தக் கட்சியின் நிா்வாகி எனது வீட்டுக்கு வந்து வற்புறுத்தினாா். இதனால் வேறு வழியின்றி திமுகவின் கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக் கொண்டேன். நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்ட இரண்டு மணி நேரத்தில் எனக்கு அழைப்பே விடுக்கவில்லை என்று திமுக தரப்பினா் கூறினா்.

திமுக நிா்வாகி என்னை எனது வீட்டில் வந்து சந்தித்த புகைப்படமும், விடியோ காட்சியும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொலைக்காட்சிகளில் வெளியான காட்சிகளையும் மறுத்து, தங்களது கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என திமுகவினா் கூறினா்.

இதிலிருந்து திமுகவுக்கு அரசியல் கண்ணியம் என்ன என்பது தெரியவில்லை. அவா்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. எங்களுக்குத் தேவை அரசியல் பதவி, பொறுப்பு அல்ல. மரியாதை, கண்ணியம் மட்டும்தான். அதனை எங்களுக்கு யாா் தருவாா்களோ அவா்களை மதிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *