பிளஸ்-2 செய்முறைத்தேர்வு அடுத்த மாதம் 16-ந்தேதி தொடக்கம்

சென்னை, மார்ச்-13

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அந்தவகையில் செய்முறைத்தேர்வு எப்போது நடத்தப்பட வேண்டும்? எவ்வாறு நடத்த வேண்டும்? என்பது குறித்த விவரங்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

  • பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி, செய்முறை தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கு பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
  • பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் அடுத்த மாதம் 16-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையிலான நாட்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.
  • செய்முறைத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் பதிவெண் விவரங்களை முதன்மை கண்காணிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள் பாடவாரியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். செய்முறை தேர்வில் மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண்களை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் பாடவாரியாக மதிப்பெண் பட்டியல்களை தனித்தனி உறையில் அரசு முத்திரையிட்டு தங்களுடைய சொந்த பொறுப்பில் முதன்மை கண்காணிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • செய்முறைத்தேர்வுகள் நிறைவடைந்ததும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் தவறாது ஒப்படைக்க வேண்டும். அதன்பின்னர், அந்த மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு மாணவருடைய மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கக்கூடாது.
  • இந்த பணிகள் நிறைவுபெற்றதும், செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல் கட்டுகளை பள்ளி எண் வாரியாக கட்டி, வருகிற மே மாதம் 6-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வுகள் எந்தவித புகாருக்கும் இடமின்றி நடைபெறுவதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *