அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.. வேட்பு மனுத்தாக்கல் செய்த பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது அவர், 234தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

போடி, மார்ச்-13

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடி தொகுதியில் ஏற்கெனவே இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது 3-வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார். போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். தேர்தல் நன்னடத்தை உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு அதற்கான படிவத்தை பூர்த்திசெய்து மனுவை தேர்தல் அலுவலர் விஜயாவிடம் வழங்கினார். அப்போது ரவீந்திரநாத் எம்பி, நகர அதிமுக செயலர் வி.ஆர்.பழனிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

போடி தொகுதி மக்களுக்கு 10 ஆண்டுகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். கொரோனா உட்படபல்வேறு பேரிடர் காலங்களிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையானமாம்பழக் கூழ் தொழிற்சாலை இத்தொகுதியில் அமைக்கப்படும்.

கடந்த இருமுறை இத்தொகுதியில் போட்டியிட்டபோது பொதுமக்கள் அமோகமான வெற்றியை அளித்தனர். அனைத்துவாக்குறுதிகளையும் அரசாணை மூலம் நிறைவேற்றி இருக்கிறேன். நான் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு முழு கடமையாற்றி உள்ளேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது போட்டியிடுகிறேன்.

மக்களுக்கு சேவை செய்வதே எனது ஒரே குறிக்கோள். மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 234தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *