வீட்டில் ஒருவருக்கு வேலை.. அமமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்குவதோடு கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-13

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.ம.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.எம்.எம்.ஐ. தேசிய தலைவர் ஓவைசி, எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.இ.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்ட கூட்டணி, தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கையை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். இதில் 100 தலைப்புகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் விவரம் வருமாறு:-

  • மாதம் ஒரு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் நேரடியாக பங்கேற்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
  • அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும். குறைந்தபட்சம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படும்.
  • மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும்.
  • தமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும்.
  • வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டம் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் சட்ட மேலவை மீண்டும் உருவாக்கப்படும்.
  • ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
  • கியாஸ் சிலிண்டருக்கு தலா ரூ.100 மானியம் வழங்கப்படும்.
  • 45 வயது வரையிலான ஆண்களுக்கும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். பணிக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்கண்டவை உள்பட ஏராளமான வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *