தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

சென்னை, மார்ச்-12

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

அத்துடன், காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்யும் நிலையில் உள்ளன. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் எந்த நேரத்திலும் வெளியிட தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் ஆகும். எனவே, 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது. தொடர்ந்து, 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

கொரோனா காரணமாக வேட்பு மனு தாக்கலுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர வேண்டும், 2 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை ஆன்லைனில் பெற்று அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மனு தாக்கல் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ஆம் தேதி கடைசி நாளாகும். 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 22ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று போடி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். இன்று பிற்பகல் 12.30 மணியளவில் அவருக்கு போடிநாயக்கனூர் எல்லையில் உள்ள சாலைக்காளியம்மன் கோவிலில் பாஜகவினர், அதிமுகவினரால் மிகப்பெரிய ஒரு வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. சாலைக்காளியம்மன் கோவிலில் இருந்து பழைய பேருந்து நிலையம், கட்டபொம்மன் சிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக அவர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிமுகவை பொறுத்த வரை தற்போது முதல் ஆளாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் போடி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *