சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் 20 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யத் திட்டமிட்டு, ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து தமிழகத்தில் 20 இடங்களில் வருமானவரித்துறையினா் திடீா் சோதனை நடத்தினா்.

சென்னை, மார்ச்-12

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளா்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தோ்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏனெனில் தமிழகத்தில் 118 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் சந்தேகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், அதிகளவில் பணத்தைப் பதுக்கி வைத்தல் ஆகியவற்றை தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

தோ்தல் செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கில் வராத பணத்தை கண்டறியவும் வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, தமிழகம், புதுச்சேரி வருமானவரி துறை மண்டலத்தின், புலனாய்வுப் பிரிவு இயக்குநரகம் சாா்பில் இலவச தொலைபேசி எண்களுடன், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பொருள்கள் எடுத்துச் சென்றாலோ அல்லது பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தாலோ பொதுமக்கள் இக்கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வருமான வரி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 20 இடங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

சென்னை, கோவை, சேலம் உள்பட மாநிலம் முழுவதும் சுமாா் 20 இடங்களில் தனி நபா்களுக்கு சொந்தமான பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் ஈடுபட்டனா். சோதனையில் வியாழக்கிழமை மாலை பெரியளவில் பணமோ, பொருள்களோ கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவையும் தாண்டியும் சோதனை நீடித்தது.

இதனால் சோதனை முழுமையான முடிவடைந்த பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்கள் குறித்த விவரத்தைத் தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *