காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு… 5 தொகுதிகளில் பாஜகவுடன் நேரடி போட்டி..!

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் தொடர்பாக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

சென்னை, மார்ச்-12

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பட்டியலை காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டார்.

பொன்னேரி, வேளச்சேரி, தென்காசி , ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, மேலூர், சிவகாசி, ஓமலூர், உதகை, காரைக்குடி, ஊத்தங்கரை, கோவை தெற்கு, ஈரோடு, கிள்ளியூர், அறந்தாங்கி, நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, மயிலாடுதுறை, உடுமலைப்பேட்டை, விருத்தாசலம் ஆகிய 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் நாங்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்த கூட்டணி தமிழக அரசியலில் மட்டுமல்ல; இந்திய அரசியலிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் இந்த தேர்தலின் சிறப்பு. மக்கள் நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை கருத்தில்கொண்டு இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி 100% வெற்றிபெறும்’’ என்று பேசினார்.

இதில் குளச்சல், விளவங்கோடு, கோவை தெற்கு, காரைக்குடி, உதகை ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் – பாஜக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *